widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Friday, 22 August 2014

நானும் மெட்ராஸ்வாசி தான் ..!! #MADRAS375

சென்னை என்கிற பெருநகரத்துடன் எனக்கிருக்கும் உறவு ஐந்து வருடங்களாக தொடர்கிறது. சிலதை விட்டுத்தொலைக்கிறோம் என்று சொல்வோம்,அதை இறுதிவரை விடவே முடியாது. மெட்ராஸ் என்கிற இந்த நகரமும் அப்படித்தான். சென்னையில் ஆரம்பகால பயணங்களில் ஒழுங்காக எந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று தெரியாது,இறங்கினாலும் வேறொரு இடத்துக்கு போகவேண்டி இருக்கும். சில சமயம் வேகமாக வாகனங்கள் வரும் சாலையின் நடுப்புறம் வண்டியை நிறுத்துவதை பார்த்து பயந்து அடுத்த ஸ்டாப்பில் போய் இறங்கிய கதைகள் உண்டு. அதனாலேயே முப்பது ரூபாய் பாஸ் எடுத்து பல இடம் சுற்றியிருக்கிறேன்.

சென்னைக்கு வந்ததும் நான் தேடிய முதல் இடம் மெரீனா கடற்கறை. என் கல்லூரியில் நான் கேட்ட அனைவருக்குமே தெரியும் என்றே சொன்னார்கள் நீண்ட சாலைகள் மாலை நேரங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம் என அங்கு மொத்தமாக இரண்டே இரண்டு முறை தான் அதை எட்டிப்பார்த்து இருக்கிறேன். அங்கு குதிரை சவாரி செய்த அனுபவமும் உண்டு எனக்கு ...





தெருவோரக்கடைகளை தேடி சென்னையின் சாலையோரக்கடைகள் வழியாக தவங்கிடந்த அந்த நாட்கள்,அங்கே பெருகி ஓடிய சென்னைத்தமிழ் எல்லாமும் நெஞ்சை விட்டு அகலாதது. இரவுகளில் சில நேரம் பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கும் பொழுது கனியோ,முறுக்கோ எடுத்து எளியவர்கள் நீட்டுவதை இந்த நகரத்தில் கண்டிருக்கிறேன். தனியாக நகரின் வெளிப்பகுதியில் இருந்து நடந்து வருகிற பொழுது ஏறிக்கொள் என்று முகத்தளவில் முரட்டு சுபாவத்தோடு தெரிபவர்கள் ஏற்றிக்கொள்கிற அற்புதமும் இங்குண்டு. சென்னைவாசி என்கிற உரிமையை சென்னையில் வந்து சேர்ந்துவிட்டு யாரும் கோரலாம். இப்படி இருந்தால் மட்டும் தான் மெட்ராஸ்வாசி என்கிற எந்த வரையறையும் அது வகுத்துக்கொள்வதில்லை. கசடுகள் கலந்து ஓடுகிற கூவம் நதி போல அது எல்லாவற்றையும் தனக்குள் வாங்கிக்கொள்கிறது. அதே சமயம் அதன் ஓரமாக வாழும் வெள்ளந்தி மனிதர்கள் போல அதன் குணம் அற்புதமானது.

இந்த நகரத்தில் இருக்கும் பரபரப்புகள் கொஞ்சம் வித்தியாசமானது. ஓடிவிட வேண்டும்,எதை பிடிக்கிறோம் என்று தெளிவிருந்தாலும் ஓடுகிறவன் பொறுமையாக போக நினைக்கும் நம்மையும் அவர்களின் சுழலில் கூடவே இழுத்து சென்று விடுவார்கள். என் கல்லூரி ஒரு விதிவிலக்கு அது அளவில்லாத பொறுமையை தான் பரிசளித்திருக்கிறது. சென்னையின் முகம் எது ? சென்னை பிரமிப்பதை நிறுத்திக்கொள்ள வெகு சீக்கிரமே சொல்லித்தந்து விடும். அதே போல எதையும் கடந்து போகும் ஒரு தன்மையும் அதற்குண்டு. நேற்றைக்கு இப்படி இருந்த இடமா என்கிற ஆச்சரியத்தை நகர்ந்தபடியே இருக்கும் வாழ்க்கை கட்டமைத்து விடுகிறது.

"இதெல்லாம் ஒரு ஊரா ?" என்பவர்கள் ஒருபுறம். சென்னையின் நெடிய வரலாற்றை கிரிக்கெட்,மால்கள்,சென்ட்ரல் நிலையம் என்று காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறவர்கள் இன்னொரு புறம். இங்கே மனிதர்கள் நிரம்பிக்கிடக்கிறார்கள். அவர்கள் புனிதர்கள் இல்லை. நரகர்கள் தான். ஆனால்,ஒவ்வொருவரின் வாசனையும் அலாதியானது. அதில் இருக்கும் அழுக்கின் சுவடுகள் கூட அழகானது. "என்ன நடக்குதுன்னு பார்த்துடுவோம் மாமு !" என்கிற அசட்டைத்தன்மை இந்த ஊரில் உண்டு. செரித்து தின்று விடுகிற பெருநகர்கள் பட்டியலிலும் சேராமல்,தன்னைத் தொலைத்து விடுகிற அபலை நகர்களிலும் சேராமல்,கைகோர்த்து சமயங்களில் மிதித்து ஓடும் இந்த மெட்ராஸ் யாருக்கும் ஒரே மாதிரியான நினைவுகளை தருவதில்லை. ஆனால்,நினைவுகளால் நிறைத்து கைகளை வேறெங்கும் நீட்டாமல் செய்துவிடும் உறவு அது.

கொஞ்சம் ட்ரெயினில் ஏறி பெருங்கடைகளில் நெரிசலில் அமிழ்ந்து ஒரே ஒரு பாதாம் கீர் குடித்து விட்டு,கடற்கரையின் மணல்வெளியில் பரிமாறப்படும் ஊடல்களை கண்டவாறே நகர்ந்துகொண்டு,கையேந்தி பவன்களில் கரம் நனைத்து,மால்களில் அமர்ந்தபடி தூக்கம் தொலைத்து,இரவு வேலைகள் செய்து சக்கரத்தை பின்புறம் செலுத்தியபடி குனிந்து நிமிர்கையில் இங்கே எதுவும் மிஞ்சிருப்பதில்லை. நினைவுகளையும்,சில கண சிலிர்ப்பையும் தவிர ! #MADRAS375

No comments: