widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Saturday, 2 August 2014

என் வாழ்வை கட்டமைத்ததில் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள்...!

என் வாழ்வை கட்டமைத்ததில் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள். 


நான் பேசுகிற பொழுது வராமல் போனாலும்," நீ கலக்கி எடுத்துடுவே மச்சி" என்றே சொல்லி சொல்லி என்னை வார்த்தார்கள். நான் எப்படி ஆடை அணிய வேண்டும்,எப்படி தலைசீவ வேண்டும்,எப்படி தேவையான இடத்தில் மட்டும் வாயைத்திறக்க வேண்டும் என்கிற வகுப்புகளும் இவர்களிடம் தான் எனக்கு கிடைத்தன. எனக்காக என்னென்னவோ செய்த இவர்களுக்கு வார்த்தைகளால் நான் நன்றிகள் சொன்னதில்லை. 

 வரலாற்று நண்பர்கள் போல எனக்கான நண்பர்கள் நீங்கள் என்று இவர்கள் யாரிடமும் சொல்லியிருப்பேன் என்றால் அது போலித்தனம். மச்சி,டேய்,சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் இது தான் எங்களின் உறவை இன்னமும் அழகானதாக ஆக்குகிறது. 


என்னுடைய எழுத்துக்களை அவர்கள் படிப்பதில்லை. பெரும்பாலான பேச்சுக்களை கேட்பதில்லை. என்னிடம் அவர்களுக்கு என்று பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால்,அவர்களுக்கு நான் முக்கியம் ; என் முகம் சுருண்டு போனாலோ,குரலில் ஏதேனும் நடுக்கம் இருந்தாலோ அவர்கள் துடித்துப்போவார்கள். 

எழுத்துப்பணி வேண்டாம் என்றிருந்தவனை உள்ளே இழுத்து வந்தவர்களும் அவர்களே,பேச வராது என்றிருந்தவனை பேச வைத்தவர்களும் அவர்களே. எனக்கு பசி என்று ஒன்று தெரியாமல் இருக்கிறதென்றால் அது என் நண்பர்களால். நான் சிரித்தபடியே முகம் கொண்டிருக்கிறேன் என்றால் என் நண்பர்கள் என் முன் அழாமல் இருப்பதால் தான். அவர்கள் அழுகையை துடைக்க நான் பலமணி நேரம் பேச்சு தவம் கிடந்திருக்கிறேன்.

என்னை நாயகன் போலவே நடத்தி இருக்கிறார்கள் அவர்கள். என்றைக்கும் சண்டைகளை தாண்டி,சொரணைகளை தூக்கி எரிந்து விட்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் தர கற்றுதந்தவர்கள் அவர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்பொழுதும் என்னை பார்த்ததும் அன்பால்,வார்த்தைகளால் நிறைக்கும் இவர்கள் இல்லாமல் நான் இப்படி இயல்பாக உணர்வேனா என்று தெரியவில்லை. ஒருமுறை நண்பனொருவன் வெகுகாலம் நான் தனிமையாக உணர்வதை எப்படி உணர்ந்தானோ தெரியாது ; நேரில் வந்து பார்த்து மூன்று மணிநேரம் நேரம் ஒதுக்கி பேசிவிட்டு போகிற பொழுது ,"பேசலைனா நீயெல்லாம் செத்துடுவே மச்சி ! அதான் வந்தேன்."என்றபடி நகர்ந்தான். 


காதலிக்காக அழும் நண்பன்,இனிமேல் மதுவை தொடவே மாட்டேன் என்று உத்தரவாதம் தரும் நண்பன், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பார்த்தாலும் அன்று போலவே இன்றும் பேசும் நண்பன்,நண்பனின் நண்பனாக காக்கக் விழைவோர்,வயதைக்கடந்து தோழர் என்போர் என்று எத்தனை உறவுகள் நம் வாழ்வில் ? முகமே பார்க்காமல் நண்பனாகி ஓயாத உடல்நலக்குறைவிருந்தாலும் கனவுகளை துரத்தும் அற்புதமான நண்பர்களையும் கண்டிருக்கிறேன். முகங்கள் மறந்தாலும் பாதைகள் தானே முக்கியம் ? 

நள்ளிரவில் மருத்துவமனை கூட்டிப்போன நண்பன்,விடிய விடிய காதலி போல சமூகம் சார்ந்து பேசிய நண்பன்,ஏன் என்றே கேட்காமல் எங்கே கூட்டிப்போனாலும் கூட வரும் நண்பன்,என் நம்பிக்கைகளில் தலையிடாத நண்பன்,என் மீது யாரும் அவச்சொல் சொல்ல விடாத தோழி என்று என்னைச்சுற்றி எத்தனை பேர். எனக்கு எண்ணற்ற நண்பர்களா என்றால் எனக்கு தெரியவில்லை. ஆனால்,எனக்கு இருக்கும் நண்பர்கள் அற்புதமானவர்கள்,அரிதானவர்கள். 


அவர்களையும் நானும்,அவர்கள் என்னையும் குறைகளோடு நேசிக்கிறோம். இதைப்படித்து நாமும் அப்படித்தானே என்று நீங்கள் உணர்வீர்கள் என்றால் நாமும் நண்பரே. நட்பே ஜெயிக்கட்டும். நண்பர்கள் தின வாழ்த்துகள் 
நேசமுடன்- அஹமது ரிலா 

1 comment:

Unknown said...

yeah its true....i think they moulded us in a way tat everyone expected from us...
reading tis msg is awesome frnd..
In 4 years of our college life i didnt ever speak to u...
nw im feeling for that...
anyway u r my frnd forever...
happy frnship day my dr frnd...
may allah bless us with all happiness in our life...