widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Friday, 22 August 2014

நானும் மெட்ராஸ்வாசி தான் ..!! #MADRAS375

சென்னை என்கிற பெருநகரத்துடன் எனக்கிருக்கும் உறவு ஐந்து வருடங்களாக தொடர்கிறது. சிலதை விட்டுத்தொலைக்கிறோம் என்று சொல்வோம்,அதை இறுதிவரை விடவே முடியாது. மெட்ராஸ் என்கிற இந்த நகரமும் அப்படித்தான். சென்னையில் ஆரம்பகால பயணங்களில் ஒழுங்காக எந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று தெரியாது,இறங்கினாலும் வேறொரு இடத்துக்கு போகவேண்டி இருக்கும். சில சமயம் வேகமாக வாகனங்கள் வரும் சாலையின் நடுப்புறம் வண்டியை நிறுத்துவதை பார்த்து பயந்து அடுத்த ஸ்டாப்பில் போய் இறங்கிய கதைகள் உண்டு. அதனாலேயே முப்பது ரூபாய் பாஸ் எடுத்து பல இடம் சுற்றியிருக்கிறேன்.

சென்னைக்கு வந்ததும் நான் தேடிய முதல் இடம் மெரீனா கடற்கறை. என் கல்லூரியில் நான் கேட்ட அனைவருக்குமே தெரியும் என்றே சொன்னார்கள் நீண்ட சாலைகள் மாலை நேரங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம் என அங்கு மொத்தமாக இரண்டே இரண்டு முறை தான் அதை எட்டிப்பார்த்து இருக்கிறேன். அங்கு குதிரை சவாரி செய்த அனுபவமும் உண்டு எனக்கு ...





தெருவோரக்கடைகளை தேடி சென்னையின் சாலையோரக்கடைகள் வழியாக தவங்கிடந்த அந்த நாட்கள்,அங்கே பெருகி ஓடிய சென்னைத்தமிழ் எல்லாமும் நெஞ்சை விட்டு அகலாதது. இரவுகளில் சில நேரம் பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கும் பொழுது கனியோ,முறுக்கோ எடுத்து எளியவர்கள் நீட்டுவதை இந்த நகரத்தில் கண்டிருக்கிறேன். தனியாக நகரின் வெளிப்பகுதியில் இருந்து நடந்து வருகிற பொழுது ஏறிக்கொள் என்று முகத்தளவில் முரட்டு சுபாவத்தோடு தெரிபவர்கள் ஏற்றிக்கொள்கிற அற்புதமும் இங்குண்டு. சென்னைவாசி என்கிற உரிமையை சென்னையில் வந்து சேர்ந்துவிட்டு யாரும் கோரலாம். இப்படி இருந்தால் மட்டும் தான் மெட்ராஸ்வாசி என்கிற எந்த வரையறையும் அது வகுத்துக்கொள்வதில்லை. கசடுகள் கலந்து ஓடுகிற கூவம் நதி போல அது எல்லாவற்றையும் தனக்குள் வாங்கிக்கொள்கிறது. அதே சமயம் அதன் ஓரமாக வாழும் வெள்ளந்தி மனிதர்கள் போல அதன் குணம் அற்புதமானது.

இந்த நகரத்தில் இருக்கும் பரபரப்புகள் கொஞ்சம் வித்தியாசமானது. ஓடிவிட வேண்டும்,எதை பிடிக்கிறோம் என்று தெளிவிருந்தாலும் ஓடுகிறவன் பொறுமையாக போக நினைக்கும் நம்மையும் அவர்களின் சுழலில் கூடவே இழுத்து சென்று விடுவார்கள். என் கல்லூரி ஒரு விதிவிலக்கு அது அளவில்லாத பொறுமையை தான் பரிசளித்திருக்கிறது. சென்னையின் முகம் எது ? சென்னை பிரமிப்பதை நிறுத்திக்கொள்ள வெகு சீக்கிரமே சொல்லித்தந்து விடும். அதே போல எதையும் கடந்து போகும் ஒரு தன்மையும் அதற்குண்டு. நேற்றைக்கு இப்படி இருந்த இடமா என்கிற ஆச்சரியத்தை நகர்ந்தபடியே இருக்கும் வாழ்க்கை கட்டமைத்து விடுகிறது.

"இதெல்லாம் ஒரு ஊரா ?" என்பவர்கள் ஒருபுறம். சென்னையின் நெடிய வரலாற்றை கிரிக்கெட்,மால்கள்,சென்ட்ரல் நிலையம் என்று காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறவர்கள் இன்னொரு புறம். இங்கே மனிதர்கள் நிரம்பிக்கிடக்கிறார்கள். அவர்கள் புனிதர்கள் இல்லை. நரகர்கள் தான். ஆனால்,ஒவ்வொருவரின் வாசனையும் அலாதியானது. அதில் இருக்கும் அழுக்கின் சுவடுகள் கூட அழகானது. "என்ன நடக்குதுன்னு பார்த்துடுவோம் மாமு !" என்கிற அசட்டைத்தன்மை இந்த ஊரில் உண்டு. செரித்து தின்று விடுகிற பெருநகர்கள் பட்டியலிலும் சேராமல்,தன்னைத் தொலைத்து விடுகிற அபலை நகர்களிலும் சேராமல்,கைகோர்த்து சமயங்களில் மிதித்து ஓடும் இந்த மெட்ராஸ் யாருக்கும் ஒரே மாதிரியான நினைவுகளை தருவதில்லை. ஆனால்,நினைவுகளால் நிறைத்து கைகளை வேறெங்கும் நீட்டாமல் செய்துவிடும் உறவு அது.

கொஞ்சம் ட்ரெயினில் ஏறி பெருங்கடைகளில் நெரிசலில் அமிழ்ந்து ஒரே ஒரு பாதாம் கீர் குடித்து விட்டு,கடற்கரையின் மணல்வெளியில் பரிமாறப்படும் ஊடல்களை கண்டவாறே நகர்ந்துகொண்டு,கையேந்தி பவன்களில் கரம் நனைத்து,மால்களில் அமர்ந்தபடி தூக்கம் தொலைத்து,இரவு வேலைகள் செய்து சக்கரத்தை பின்புறம் செலுத்தியபடி குனிந்து நிமிர்கையில் இங்கே எதுவும் மிஞ்சிருப்பதில்லை. நினைவுகளையும்,சில கண சிலிர்ப்பையும் தவிர ! #MADRAS375

Saturday, 9 August 2014

திருச்சி விமான நிலையத்தில் தொழுகை அறை !!

உலகில் உள்ள முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக சென்னைக்கு அடுத்தபடியாக  திருச்சி சர்வதேச விமான நிலையமும் செயல்பட்டு வருகிறது ...



                                        ஆச்சரியத்தில் ஆழ்த்திய பள்ளிவாசல் !!


பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த விமான விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்றுவருகின்றனர்...இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .

இங்கு அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை நிறுவியுள்ளனர்... 24 மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அறையில் சுமார் 10 பேர் வரை ஒரே நேரத்தில் தொழக்கூடிய அளவிற்கு வசதி கொண்ட இடம் அளிக்கப்பட்டுள்ளது ...ஒழு செய்வதற்கு தொழுகை அறையின் உள்ளே குளியல் அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.... இப்பள்ளிக்கு இமாம் மற்றும் மோதினார் கிடையாது அவரவர் தொழுகையை நிறைவேற்றி செல்லும் நிலை.. 

ஆனால் இந்த வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல்  இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.  இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை..

இது பற்றி அங்கு பணி புரியும் சகோதரர் தெரிவித்தது...

இந்த தொழுகை அறையை  இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய அதிகாரிகளின் முயற்ச்சியால் கோரிக்கை  வைத்து அனுமதி வாங்கி தொழுகை நடத்தி வருகின்றனர்...



ஆகவே அன்பான சகோதர, சகோதரிகளே நம் தொழுகை இறைவனிடம் ஏற்புடையதாக அமையும் வகையில் நாம் தொழுவோம் அதற்காக நிறைய இடங்கள் இந்த விமான நிலையத்தில்  உள்ளது அந்த இடத்தில் நாம் தொழ முயற்ச்சி செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

இதைப்போல் அனைத்து விமான நிலையங்கள்,அரசு அலுவலகங்கள்,மருத்துவமனைகள்,பள்ளி ,கல்லூரிகளில் தொழுகை நடைப்பெற முடியாத சூழல் நிலவும் பகுதிகளில் முறச்சி எடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்து 5 வேலை தொழுகை நடைப்பெறுவதற்கு முயற்ச்சி எடுங்கள்...
புகைப்படம் :- அப்துல் ஹசன் -தோப்புத்துறை 

-லால்பேட்டை அஹமது ரிலா 

Saturday, 2 August 2014

என் வாழ்வை கட்டமைத்ததில் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள்...!

என் வாழ்வை கட்டமைத்ததில் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள். 


நான் பேசுகிற பொழுது வராமல் போனாலும்," நீ கலக்கி எடுத்துடுவே மச்சி" என்றே சொல்லி சொல்லி என்னை வார்த்தார்கள். நான் எப்படி ஆடை அணிய வேண்டும்,எப்படி தலைசீவ வேண்டும்,எப்படி தேவையான இடத்தில் மட்டும் வாயைத்திறக்க வேண்டும் என்கிற வகுப்புகளும் இவர்களிடம் தான் எனக்கு கிடைத்தன. எனக்காக என்னென்னவோ செய்த இவர்களுக்கு வார்த்தைகளால் நான் நன்றிகள் சொன்னதில்லை. 

 வரலாற்று நண்பர்கள் போல எனக்கான நண்பர்கள் நீங்கள் என்று இவர்கள் யாரிடமும் சொல்லியிருப்பேன் என்றால் அது போலித்தனம். மச்சி,டேய்,சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் இது தான் எங்களின் உறவை இன்னமும் அழகானதாக ஆக்குகிறது. 


என்னுடைய எழுத்துக்களை அவர்கள் படிப்பதில்லை. பெரும்பாலான பேச்சுக்களை கேட்பதில்லை. என்னிடம் அவர்களுக்கு என்று பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால்,அவர்களுக்கு நான் முக்கியம் ; என் முகம் சுருண்டு போனாலோ,குரலில் ஏதேனும் நடுக்கம் இருந்தாலோ அவர்கள் துடித்துப்போவார்கள். 

எழுத்துப்பணி வேண்டாம் என்றிருந்தவனை உள்ளே இழுத்து வந்தவர்களும் அவர்களே,பேச வராது என்றிருந்தவனை பேச வைத்தவர்களும் அவர்களே. எனக்கு பசி என்று ஒன்று தெரியாமல் இருக்கிறதென்றால் அது என் நண்பர்களால். நான் சிரித்தபடியே முகம் கொண்டிருக்கிறேன் என்றால் என் நண்பர்கள் என் முன் அழாமல் இருப்பதால் தான். அவர்கள் அழுகையை துடைக்க நான் பலமணி நேரம் பேச்சு தவம் கிடந்திருக்கிறேன்.

என்னை நாயகன் போலவே நடத்தி இருக்கிறார்கள் அவர்கள். என்றைக்கும் சண்டைகளை தாண்டி,சொரணைகளை தூக்கி எரிந்து விட்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் தர கற்றுதந்தவர்கள் அவர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்பொழுதும் என்னை பார்த்ததும் அன்பால்,வார்த்தைகளால் நிறைக்கும் இவர்கள் இல்லாமல் நான் இப்படி இயல்பாக உணர்வேனா என்று தெரியவில்லை. ஒருமுறை நண்பனொருவன் வெகுகாலம் நான் தனிமையாக உணர்வதை எப்படி உணர்ந்தானோ தெரியாது ; நேரில் வந்து பார்த்து மூன்று மணிநேரம் நேரம் ஒதுக்கி பேசிவிட்டு போகிற பொழுது ,"பேசலைனா நீயெல்லாம் செத்துடுவே மச்சி ! அதான் வந்தேன்."என்றபடி நகர்ந்தான். 


காதலிக்காக அழும் நண்பன்,இனிமேல் மதுவை தொடவே மாட்டேன் என்று உத்தரவாதம் தரும் நண்பன், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பார்த்தாலும் அன்று போலவே இன்றும் பேசும் நண்பன்,நண்பனின் நண்பனாக காக்கக் விழைவோர்,வயதைக்கடந்து தோழர் என்போர் என்று எத்தனை உறவுகள் நம் வாழ்வில் ? முகமே பார்க்காமல் நண்பனாகி ஓயாத உடல்நலக்குறைவிருந்தாலும் கனவுகளை துரத்தும் அற்புதமான நண்பர்களையும் கண்டிருக்கிறேன். முகங்கள் மறந்தாலும் பாதைகள் தானே முக்கியம் ? 

நள்ளிரவில் மருத்துவமனை கூட்டிப்போன நண்பன்,விடிய விடிய காதலி போல சமூகம் சார்ந்து பேசிய நண்பன்,ஏன் என்றே கேட்காமல் எங்கே கூட்டிப்போனாலும் கூட வரும் நண்பன்,என் நம்பிக்கைகளில் தலையிடாத நண்பன்,என் மீது யாரும் அவச்சொல் சொல்ல விடாத தோழி என்று என்னைச்சுற்றி எத்தனை பேர். எனக்கு எண்ணற்ற நண்பர்களா என்றால் எனக்கு தெரியவில்லை. ஆனால்,எனக்கு இருக்கும் நண்பர்கள் அற்புதமானவர்கள்,அரிதானவர்கள். 


அவர்களையும் நானும்,அவர்கள் என்னையும் குறைகளோடு நேசிக்கிறோம். இதைப்படித்து நாமும் அப்படித்தானே என்று நீங்கள் உணர்வீர்கள் என்றால் நாமும் நண்பரே. நட்பே ஜெயிக்கட்டும். நண்பர்கள் தின வாழ்த்துகள் 
நேசமுடன்- அஹமது ரிலா