widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Friday, 5 September 2014

தாழ்மையான மாணவனின்ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

என்னுடைய வாழ்க்கையின் ஆசான்கள் எத்தனையோ பேரால் தான் கொஞ்சமாவது வாழ்க்கையில் பக்குவப்பட்டிருக்கிறேன் என்பதே சரி. அவர்களில் பலர் கற்றுக்கொண்டே இருப்பதற்கு முடிவில்லை என்று உணர்த்தினார்கள். வாழ்க்கை என்பது பணத்தையும் தாண்டியது என்று சொல்லாமல் சொன்னவர்கள் சிலர். கையை ஓங்காமலே மாணவர்களிடையே மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று சாதித்தவர்கள் சிலர். எந்த வித ஆரவாரமும் இல்லாமல் தான் செய்ய வேண்டியதை செவ்வனேசெய்தவர்கள் சிலர். "வாழ்க்கையில வேற எதையும் சம்பாதிக்கலை. முழுசா கடன். ஆனா,நல்ல பசங்களை சம்பாதிச்சு இருக்கேன் !" என்று நெகிழ்ந்த ஆசிரியரின் அந்த கணத்தில் நானும் உடனிருந்தது எததகைய பேறு ?

"எனக்குத்தெரியல. சொல்லித்தா. கத்துக்கிறேன் !" என்று கற்றுக்கொள்ள எப்பொழுதும் காத்திருக்கும் அந்த கனத்த மனிதரின் மனம் பெருநதி போல தோன்றியது. பல காலம் கடந்த பின்னும் இன்றைக்கு தான் முதல் வகுப்புக்கு நடத்தப்போவது போல தயாரித்து விட்டு வந்த அந்த ஆசிரியர்களை இனி எங்க காண்பேன். "என்னைவிட இது உனக்கு நல்லாத்தெரியுது. நீயே நடத்து." என்று மாணவனாக அமர்ந்து கொண்ட உன்னதர்களை இனி வகுப்பறைகளில் காண முடியாது. பெரிய குறைகள் கல்வி முறையின் மீது இருக்கலாம்,எப்படியெல்லாம் ஆசிரியர்கள் இருக்கக்கூடாது என்று பாடமெடுத்தவர்கள் அநேகம் பேர். ஆனாலும்,கசடுகள் அடியில் தங்கிவிட்டு நல்லன மட்டுமே மனமெல்லாம் நிறைந்து இருக்கிறது. என்னைப்போல பலரின் வாழ்க்கையை வார்த்த எளிய மனிதர்களுக்கு இணையற்ற வணக்கங்கள்  கற்பிக்கும் எல்லாருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்...